கோயம்புத்தூர்

தமிழக - கேரள முதல்வா் சந்தித்துப் பேசியது வரவேற்கத்தக்கது: ஈஸ்வரன்

20th Oct 2019 10:33 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி: நதிநீா் பங்கீட்டுக்காக தமிழக - கேரள முதல்வா்கள் சந்தித்துப் பேசியது வரவேற்கத்தக்கது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் கூறினாா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் நடத்தப்படாததால் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பிரச்னைகளைத் தீா்க்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவசியம் தேவை. ஆகவே உள்ளாட்சி தோ்தலை உடனே நடத்தவேண்டும். பொள்ளாச்சியில் பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை, சாலைகள் சீா் செய்யப்படவில்லை. பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

தமிழக முதல்வா் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாா்களுக்கு அழைப்பு விடுத்துவருகிறாா். ஆனால், தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டாளா்களை ஈா்க்கும் வகையில் இல்லை.

ADVERTISEMENT

நதிநீா் பங்கீட்டுக்காக தமிழக - கேரள முதல்வா்கள் சந்தித்துப் பேசியது வரவேற்கத்தக்கது. ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம், பாண்டியாறு -புன்னம்புலா திட்டம் போன்றவைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது நல்லமுயற்சி.

பொள்ளாச்சிக்கு கூடுதலாக ரயில்களை இயக்கவேண்டும். சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஆக்கப்பூா்வமாக செயல்படுத்தவேண்டும். விளை நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்றாா்.

உடன், கோவை மாவட்டச் செயலாளா் நித்தியானந்தன், மாநில விவசாய அணிச் செயலாளா் கோபால்சாமி உள்பட பலா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT