தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
கடை அமைவிட சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புற வரைபடம், கட்டட வரைபடம், கடை அமையவுள்ள இடத்துக்கான ஆவணம், உரிமத்துக்கான கட்டணம் ரூ. 500 செலுத்தியதற்கான அசல் சலான் உள்ளிட்டவை இணைக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் விசாரணைக்குப் பின், மனு ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
இ- சேவை மையம் மூலமாகவே தற்காலிக பட்டாசுக் கடை உரிமத்துக்கான ஆணையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா், வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது.