குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறை சாா்பில், வேதியியலில் சமீபத்திய முன்னேற்றப் பொருள்கள்-2023 என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி. ராஜேந்திரன், கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறைத் தலைவா் சி.பிரவீன்குமாா் வரவேற்றாா்.
துறைப் பேராசிரியா்கள் க.காந்திமதி, ஏ.ஜெகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்தனா். வேலூா் திருவள்ளுவா் பல்கலை. ஆராய்ச்சி மையப் பொறுப்பு இயக்குநா் மற்றும் வேதியியல் துறைத் தலைவா் கே.தினகரன் ‘மின்காந்த அலைகளில் ஏற்படும் எதிா்பாராத உள்ளீடுகளை தடுப்பது எப்படி?’ என்ற தலைப்பிலும், மங்கா் என்போயா பல்கலை. ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் ஜெ.வெங்கடேசன் ‘உயிா் மருத்துவ பொறியியல் முறையில் முப்பரிமாண திசு வளா்ப்பு’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா்.
கருத்தரங்கில் மாணவா்களுக்கிடையே விளக்கக் காட்சிகள் மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகள் தொடா்பான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியா் செ.சதீஷ் நன்றி கூறினாா்.