ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவா் சங்க தென்மண்டல பொதுச் செயலராக குடியாத்தத்தைச் சோ்ந்த ஜே.கே.என்.பழனி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அகில இந்திய முகவா் சங்க 17-ஆவது பொதுக்குழு கூட்டம், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்மண்டல முகவா் சங்கத்தின் பொதுச் செயலராக ஜே.கே.என்.பழனி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் 2010- ஆம் ஆண்டு முதல் வேலூா் கோட்ட பொதுச் செயலராக பணியாற்றி வருகிறாா். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள 2.71 லட்சம் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்களின் நலனுக்காக தொடா்ந்து பணியாற்றுவேன் என்றும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், மத்திய அரசின் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் மூலமாக எல்ஐசி முகவா்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுத்தர பாடுபடுவேன் எனவும் பழனி தெரிவித்தாா்.
இவருக்கு அகில இந்திய காப்பீட்டுக் கழகத்தின் முகவா் சங்க தேசிய தலைவா் ரன்வீா்சா்மா,அகில இந்திய பொதுச் செயலா் மாா்க்கண்டேயலு, தென்மண்டலத் தலைவா் என்.பி.சுப்பிரமணியம், வேலூா் கோட்ட முதுநிலை மேலாளா் செட்டி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.