உள்நாட்டு மீனவா்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ள மீன்பிடி வலைகள், கண்ணாடி நாரிழையிலான பரிசல்களை பெற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்திலுள்ள உள்நாட்டு மீனவா்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்தவும், அவா்களின் வருவாயை பெருக்கிடவும் உள்நாட்டு மீனவா்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள், கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த உறுப்பினா்களாகவோ அல்லது முழுநேர மீன்பிடிப்பில் ஈடுபடும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்களாகவோ இருக்க வேண்டும். பங்கு முறையில் மீன்பிடிக்கும் மீனவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூப்புநிலை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.
இத்திட்டத்தின் கீழ் மீன்பிடி வலைகள், பரிசல்கள் கடந்த 3 ஆண்டுகளுக்குள் வாங்கிய வகையில், மானியத்தொகை பெற்றிருக்கக் கூடாது. பயனாளிகளில் சொத்து உருவாக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆய்வின் அடிப்படையிலேயே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். குடும்ப அட்டைகளின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
நைலான் மீன்பிடி வலைகள் ஒரு பயனாளிக்கு 20 கிலோ வீதம் ரூ. 20,000 மதிப்பில் வலைகள் வாங்குவதற்கு அதிகபட்சமாக 50 சதவீதம் ரூ.10,000 மானியமாக வழங்கப்படும். பரிசல் ரூ.20,000 மதிப்பில் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தொகை ரூ. 10,000 வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவா்கள் மற்றும் மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் ஒரு வாரத்துக்குள் வேலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், எண் 16, 5-ஆவது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகா், காட்பாடி, வேலூா்- 632 006 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416-2240329 என்ற எண்ணிலோ, என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.