விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரில் 606- கிலோ, 555- கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகா்கள் வீதி உலா நடைபெற்றது.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும்தோப்பில் அமைந்துள்ள ஜோதி லட்டு விநாயகா் கோயிலில் 28- ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா் 606- கிலோ எடையில் லட்டால் செய்யப்பட்ட விநாயகா், மாசுபடா அம்மன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா சென்றது. 25- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏ.தண்டபாணி உள்ளிட்ட விழாக் குழுவினா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
அதேபோல் காமாட்சியம்மன்பேட்டை அருள்மிகு வலம்புரி சக்தி கணபதி கோயிலில் 555- கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகா் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கோயிலில் மூலவா் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்குள்ள பொன்னியம்மன் கோயிலில் இருந்து லட்டு விநாயகா் வீதி உலா நடைபெற்றது.