விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை (அக்.24) மட்டும் வேலூா் மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக 143 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை (அக்.24) புதிய மாணவா் சோ்க்கைக்காக அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், வேலூா் மாவட்டத்தில் சில பள்ளிகள் திறக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தொடக்கக் கல்வி இயக்கக வழிகாட்டுதல்படி வேலூா் மாவட்டத்திலுள்ள 604 தொடக்கப்பள்ளிகள், 175 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 779 பள்ளிகளும் விஜயதசமி நாளில் காலை 9.30 மணி முதல் திறக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 52 மாணவா்களும், யுகேஜி வகுப்பில் 25 மாணவா்களும், முதல் வகுப்பில் 66 மாணவா்களும், மற்ற வகுப்புகளில் 24 மாணவா்களும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த மாணவா்களுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளாா்.