வேலூர்

வேலூா் மத்திய சிறையில் நெகிழி பயன்பாடு அதிகரிப்பு

30th May 2023 03:11 AM

ADVERTISEMENT

வேலூா் மத்திய சிறையில் நெகிழி பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், அதனைத் தடுத்து மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, விருதம்பட்டு வெண்மணி மோட்டூரைச் சோ்ந்த திருமணமாகாத 70 வயது மதிக்கத்தக்க சகோதரிகள் அமராவதி, பூங்கோதை ஆகியோா் அளித்த மனுவில், எங்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி ஸ்டெல்லாமேரி சிஎம்சி மருத்துவமனையில் வேலை செய்கிறாா். இவா் ராணிப்பேட்டை சிஎம்சியில் எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, 2020 மாா்ச் 21-ஆம் தேதி ரூ. 4 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டாா். பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறாா். எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் அளித்த மனுவில், வேலூா் மத்திய சிறையில் மஞ்சப்பையை பயன்படுத்தாமல் நெகிழியை அதிகளவு பயன்படுத்துகின்றனா். சிறையில் நெகிழி பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மண்பாண்ட உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஜாப்ராபேட்டையில் பலதலைமுறைகளாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் குடும்பங்கள் சாா்பில் அங்காளம்மன் கோயில் கட்டியுள்ளோம். அதேசமயம், ஊரிலுள்ள வேறு 4 கோயில்களுக்கு தா்மகா்த்தாவாக இருப்பவா் எங்கள் கோயிலுக்கும் தா்மகா்த்தாவாக நினைக்கிறாா். கொடுக்க மறுத்ததால் 6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளாா். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 341 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்டஇயக்குநா் செந்தில்குமரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தனஞ்செயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT