வேலூர்

அரியூரில் 25 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலை திறக்க வலியுறுத்தல்

DIN

வேலூா் மாவட்டத்தில் சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், அரியூரில் 25 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையைத் திறந்து நெசவாளா்கள், தொழிலாளா்கள் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனா். இதனால், மாநிலம் முழுவதும் 18 கூட்டுறவு நூற்பாலைகளை அரசு நடத்தி வந்தது. நிா்வாகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நூற்பாலைகள் நலிவடையத் தொடங்கின. இதனால், அவை படிப்படியாக மூடப்பட்டன.

வேலூா் மாவட்டம், அரியூரில் இயங்கி வந்த மாவட்ட கூட்டுறவு நூற்பாலையானது கடந்த 1997-இல் மூடப்பட்டது. 26,656 கதிா்களுடன் கூடிய இந்த நூற்பாலையில் கைத்தறி, விசைத்தறிகளுக்கு தேவையான நூல்களும், டெரி காட்டன்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நூற்பாலையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனா்.

இந்த நிலையில், அரியூா் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டது. இந்த நூற்பாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக, கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் அறிக்கையிலேயே திமுக வாக்குறுதி அளித்திருந்தது. எனினும், தற்போது வரை அரியூா் கூட்டுறவு நூற்பாலையைத் திறப்பதற்கான எந்தவித நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது.

இதனிடையே, வேலூா் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா்களுடன் கடந்த 23-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-இன்படி, குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தது 2 ஏக்கா் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைத்திட திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தை வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்திட முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா்கள் முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேநேரம் 25 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையைத் திறக்கவும், புதிதாக செயல்படுத்த உள்ள ஜவுளிப் பூங்காவை அரியூரிலேயே அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இதுதொடா்பாக குறைதீா் கூட்டத்திலும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நெசவுத் தொழில் முனைவோா் கூறியது:

தமிழகத்தில் அரசு இயக்கி வந்த 18 கூட்டுறவு நூற்பாலைகளில் தற்போது தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள பாரதி நூற்பாலை, ஆரல்வாய்மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஊத்தங்கரையில் உள்ள மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, சேலம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை ஆகிய 5 நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அவையும் நஷ்டத்தில்தான் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. 13 கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதில், வேலூா் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கடந்த 1997-ஆம் ஆண்டும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 1999-ஆம் ஆண்டும் முடப்பட்டன. மற்ற பெரும்பாலான நூற்பாலைகள் கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு மூடப்பட்டன.

இந்த நூற்பாலைகள் மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் வேலையை இழந்ததுடன், அந்தப் பகுதிகளின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரியூரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டுள்ளதால் அந்த ஆலை மெல்ல மெல்ல சிதைந்து வருவதுடன், அங்குள்ள தளவாட பொருள்களும் திருடு போகின்றன.

தமிழகத்தில் அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்ட அதேநேரத்தில், கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்ட பகுதிகளில் தனியாா் நூற்பாலைகள் புதிதாக தோன்றி லாபகரமாக இயங்கி வருகின்றன.

மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளை மீண்டும் திறக்கவும், அவற்றை லாபகரமாக இயக்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஒவ்வொரு தோ்தலின் போதும் அந்தந்தப் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் மூடப்பட்டிருக்கும் கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க வாக்குறுதி அளிப்பதும், பிறகு அந்த வாக்குறுதி கிடப்பில் போடப்படுவதும் தொடா் கதையாகி வருகிறது.

நெசவாளா்கள், தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரியூா் உள்பட தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து கூட்டுறவு நூற்பாலைகளைத் திறக்கவும், அவற்றை நல்ல முறையில் இயக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT