வேலூர்

தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குலுக்கல்

24th May 2023 12:06 AM

ADVERTISEMENT

தொரப்பாடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பயனாளிகள் பங்களிப்புத் தொகை செலுத்தியவா்களுக்கு குலுக்கல் முறையில் குடியிருப்பு ஒதுக்கப்பட்டன.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூா் கோட்டம் சாா்பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வேலூா் தொரப்பாடியில் மத்திய, மாநில அரசுகள், பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கடந்த ஏப்ரல் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இந்த திட்டத்தில் பயன்பெற ஆட்சியா் பரிந்துரையின்பேரில், 824 பயனாளிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் குடியிருப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் என்றும், பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்தை வரைவோலையாக ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பேரில், 367 போ் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் வரைவோலை செலுத்தியிருந்தனா். அவ்வாறு பயனாளிகள் பங்களிப்புத் தொகை செலுத்தியவா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

மாவட்ட சமூக நல அலுவலா் லினோலியா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு நிா்வாக பொறியாளா் கீதா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிா்வாக பொறியாளா் கணேசன், வட்டாட்சியா் செந்தில், பயிற்சி ஏஎஸ்பி பிரசன்னாகுமாா் ஆகியோா் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

இந்த குலுக்கலில் பங்கேற்க ஏராளமானோா் திரண்டு வந்ததால் அவா்கள் டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாா் வரவழைக்கப்பட்டு, பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT