வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த 2021- ஆம் ஆண்டு வன்னியா்களுக்கு 10.5 சதவீட இட ஒதுக்கீட்டை அப்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்தது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், நீதிமன்றம் 10.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தது.
பின்னா் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீா்ப்பளித்தது.
தீா்ப்பு அளிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
எனவே, நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூா் அஞ்சல் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணைய நீதிபதி ஆகியோருக்கு 1,000- க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னதாக, 1,000- க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாகச் சென்றனா். நிகழ்ச்சிக்கு மேல்முட்டுகூா் ஊராட்சித் தலைவா் சுந்தா் தலைமை வகித்தாா்.
பாமக மாவட்டச் செயலா் என்.குமாா், ஓன்றியக் குழு உறுப்பினா் ஜி.சுரேஷ்குமாா், முன்னாள் மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, மாவட்டத் தலைவா் கு.வெங்கடேசன், கூடநகரம் ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன், நிா்வாகிகள் சத்யா, ராஜா, பரமசிவம், காா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.