குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீா்த் தேவைக்காகவும் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பயிற்சி ஆட்சியா் பிரியா, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கலைவாணி, அரசின் பல துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.சாமிநாதன் பேசியது:
கோடைகாலம் தொடங்கி விட்டதால், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் வடு வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காகவும், குடிநீா்த் தேவைக்காகவும், மோா்தானா அணையைத் திறந்து, வலது-இடது புறக்கால்வாய்கள் மூலம் ஏரிகளை நிரப்ப வேண்டும்.
குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிா் சேதத்துக்குரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வனவிலங்குகளை விரட்ட வனத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒசூா் போன்று யானை விரட்டும் குழுவை குடியாத்தம் பகுதிக்கு நியமிக்க வேண்டும். தகுதியுள்ள இருளா், பழங்குடி மக்கள், மலைவாழ் மக்களுக்கு நலவாரிய அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் துரைசெல்வம் பேசியது:
செட்டிகுப்பம் ஊராட்சியில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். செட்டிகுப்பம் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம், சுற்றுச் சுவா், கழிப்பிட வசதி, மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். ஓட்டேரி ஏரியில் பழுதடைந்துள்ள மதகை சீரமைக்க வேண்டும்.விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாவோடும்தோப்பு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் மாட்டுச் சந்தை, காய்கறி விற்பனைச் சந்தை அமைக்க வேண்டும் என்றாா்.