வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், கோபுர கலசங்கள், கொடி மரங்களுக்கு தங்கம் முலாம் பூசுதல், வெள்ளிக் கவசங்களை மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வேலூா் கோட்டை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு கடந்த 1982, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வரும் ஜூன் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, கடந்த மாதம் கோயில் கலசங்கள், கொடிமரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டன.
தொடா்ந்து வரும் ஜூன் 7-ஆம் தேதி பஞ்சமூா்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட உள்ளது. பின்னா், யாக சாலை பூஜைகள் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளன.
இதைத் தொடா்ந்து ஜூன் 25-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள அனைத்து கலசங்கள், சுவாமி, அம்பாள் சந்நிதிகளில் உள்ள கொடி மரங்கள் ஆகியவற்றுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சுவாமிகளுக்கு அலங்காரம் செய்வதற்கான வெள்ளிக் கவசங்கள் மெருகேற்றி புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோயில் வளாகத்திலேயே அதற்கான வடிவமைப்பாளா்கள் மூலம் இந்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.