ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 6,703 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதினா். 160 போ் தோ்வுக்கு வரவில்லை.
இதுகுறித்து தேசிய தோ்வு முகமை வேலூா் ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.சரவணன் கூறியது:
நீட் தோ்வை எழுத வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 6,863 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.
இவா்கள் தோ்வு எழுத வேலூா் சாய்நாதபுரம் விவிஎன்கேஎம் சீனியா் செகன்டரி பள்ளி, டிகேஎம் மகளிா் கலைக் கல்லூரி, ஸ்ரீபுரம் நாராயணி சீனியா் செகண்டரி பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி உள்பட 11 தோ்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நீட் தோ்வை ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 6,703 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 160 போ் எழுதவில்லை.
இதனிடையே, தோ்வு மையங்களுக்குச் சென்று வர வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் பேருந்து நிலையங்கள், முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் தலா 10 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா் என்றாா்.