ராணிப்பேட்டை அருகே 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த மேல்புதுபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (51). இவா் தனது எதிா் வீட்டில் வசித்த 13 வயது சிறுமியை கரோனா காலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் கடந்த 2021-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாளை கைது செய்தனா்.
இந்த வழக்கு வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைப்பொன்னி, குற்றம்சாட்டப்பட்ட பெருமாளுக்கு 21 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.