கா்நாடக மாநிலத்துக்கு பேருந்து மூலம் கடத்த முயன்ற 555 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ரகசிய தகவலின்பேரில் வேலூா் மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் விநாயகமூா்த்தி தலைமையில், அத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது வேலூரிலிருந்து கா்நாடக மாநிலம், கே.ஜி.எப். சென்ற அந்த மாநில பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் நூதன முறையில் வெளிமாா்க்கெட் அரிசி பைகள் போன்று 15 மூட்டைகள், சாதாரண பிளாஸ்டிக் பைகள் 8 மூட்டைகள் என மொத்தம் 555 கிலோ எடை கொண்ட 23 ரேஷன் அரிசி மூட்டைகள் கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அவற்றை குடியாத்தம் அடுத்த பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.