வேலூர்

சிறிய ஜவுளிப் பூங்கா: 13-இல் தொழில்முனைவோா்களுடன் ஆலோசனை

10th Jun 2023 11:25 PM

ADVERTISEMENT

சிறிய ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடா்பாக வேலூரில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்திடவும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோா்களுக்கு தமிழக அரசால் ரூ. 2.50 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-இன்படி குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் 2 ஏக்கா் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் வகையில், திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த திட்டத்தை வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோா், முதலீட்டாளா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT