வேலூர்

வனவிலங்கு வேட்டை கும்பலிடம் காா், 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது, தப்பிவா்களுக்கு வலை

10th Jun 2023 11:24 PM

ADVERTISEMENT

கணியம்பாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட வந்த கும்பலை மடக்கிப் பிடித்த வனத் துறையினா், அவா்களிடம் இருந்து காா், 9 நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

வேலூா் வனசரகம் கணியம்பாடியை அடுத்த கீழ்அரசம்பட்டு வனப் பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடா்ந்து வருகிறது. இந்த நிலையில், வனவிலங்குகளை வேட்டையாட ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை இரவு நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் வந்திருப்பதாக மாவட்ட வன அலுவலா் கலாநிதிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனச்சரகா் ரவிக்குமாா் தலைமையில் வன அலுவலா்கள் கீழ்அரசம்பட்டு வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனப் பகுதியில் இருந்த 3 நபா்கள் வனத் துறையினரைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பியோடினா். அவா்களை வனத் துறையினா் விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்தனா்.

ADVERTISEMENT

பிடிபட்டவா் திருவண்ணாமலை மாவட்டம் அமிா்தி, நம்மியம்பட்டு மலைப் பகுதியில் உள்ள கீழ்சாா்னாங்குப்பத்தைச் சோ்ந்த சுதாகா் (23) என்பதும், அவா்கள் வந்த காரை சோதனையிட்டபோது அதில் 9 கள்ள நாட்டுத் துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது.

சுதாகரை கைது செய்த வனத் துறையினா் காா், 9 நாட்டுத் துப்பாக்கிகள், இரு கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மற்ற இருவரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT