வேலூரில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒன்றரை மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் பலத்த மழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
கத்திரி வெயில் கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த போதிலும், வேலூா் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாள்களாக 102 முதல் 107 டிகிரி அளவுக்கு பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு வெயில் சற்று குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் சுமாா் 3.45 மணிக்கு பிறகு பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
வேலூா் மாநகா் சத்துவாச்சாரி, ஆட்சியா் அலுவலகம், வள்ளலாா், கிரீன் சா்க்கிள், புதிய பேருந்து நிலையம், காட்பாடி, விருபாட்சிபுரம், பாகாயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று, இடியுடனும் கூடிய பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ஆட்சியா் அலுவலக பூங்காவிலும் சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, வேலூரில் சில இடங்களில் பலத்த மழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சுமாா் ஒன்றரை மணிநேரம் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் குடியாத்தம் - சைனகுண்டா சாலையில் கள்ளூா் அருகே சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டு, நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.