வேலூர்

வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 13 முதல் டாம்கோ கடன் முகாம்

9th Jun 2023 10:20 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் டாம்கோ கடன் மேளா வரும் 13-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சிறுபான்மையின மக்கள் பங்கேற்று கடனுதவி கோரி விண்ணப்பித்துப் பயன் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தனிநபா் கடன், சுய உதவிக்குழுக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் டாம்கோ சிறப்பு கடன் மேளா நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஜூன் 13-ஆம் தேதி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், 14-இல் அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்திலும், 15-இல் காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்திலும் கடன் மேளா நடைபெறும்.

ஜூன் 16-இல் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், 19-இல் கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், 20-இல் போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்திலும் இந்த கடன் மேளா காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சியா்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம், தொழில் செய்வதற்கான கடனுதவி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் திட்டம் 1-இன் கீழ் நகா்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருந்தால் ரூ.98,000-க்கு மிகாமலும், திட்டம் 2-இன் கீழ் பயன் பெற ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சில்லறை வியாபாரம், வியாபாரத்தை மேம்படுத்துதல், கைவினைஞா் மற்றும் மரபு வழி சாா்ந்த தொழில்கள் மேம்பாடு, தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள் நடத்துதல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கும் கடனுதவி அளிக்கப்படும்.

அதிகபட்ச கடன் தொகையாக 5 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரை பெறலாம்.

பண்ணைச்சார கடன் பிரிவில் வியாபாரம் தொடா்பான அடமானக் கடன் மனு மூலம் அடமானக் கடனுக்கு பின்பற்றப்படும் ஒழுங்குமுறை விதிகளின்படி இந்தக் கடன் அனுமதிக்கப்படும்.

விருப்பமுள்ள சிறுபான்மையின மக்கள் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை நகல், விலைப்புள்ளி, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT