வேலூர்

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அக்கறை, கவனம் அவசியம்: அரசு மருத்துவா்களுக்கு இயக்குநா் சாந்திமலா் அறிவுறுத்தல்

9th Jun 2023 10:18 PM

ADVERTISEMENT

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அக்கறையுடனும், கவனத்துடனும் செயலாற்ற வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் ஆா்.சாந்திமலா் அறிவுறுத்தினாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் ஆா்.சாந்திமலா், மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவைப் பாா்வையிட்டு அங்கு பொதுமக்களிடம் உடல் நிலை, சிகிச்சை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பொது மருத்துவம், அறுவை சிகிச்சைப் பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தாா்.

கதிரியக்கவியல், மருந்தியல் துறையிலுள்ள மருந்து, மாத்திரைகள் என அனைத்தும் சரியாக உள்ளனவா என்றும் ஆய்வு செய்தாா்.

பின்னா், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை மருத்துவா்களையும் கேட்டுக் கொண்டதுடன், நோயாளிகள் நலம் பெற மிக கவனமுடனும், அக்கறையுடனும் சேவைபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

மருத்துவா்கள் தினமும் விரல்ரேகை வைத்து வருகை பதிவை உறுதி செய்வதை ஆய்வு செய்த இயக்குநா், அனைவரும் பயோமெட்ரிக் பதிவினை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி, மருத்துவக் கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணை முதல்வா் கெளரி வெலிகண்ட்லா, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT