வேலூர்

ஆவின் பால் திருடப்பட்ட விவகாரம்: இரு விநியோகஸ்தா்களின் ஒப்பந்தம் ரத்து

DIN

ஒரே பதிவெண்ணில் இரு வேன்களை இயக்கி வேலூா் ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும் 2,500 லிட்டா் பால் திருடப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து, இரு பால் விநியோகிப்பாளா்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த சில நாள்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கும் இடையே தினமும் சுமாா் 2,500 லிட்டா் அளவுக்கு வித்தியாசம் இருப்பதை அறிந்த அதிகாரிகள். இதுதொடா்பாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

விசாரணையில் டிஎன் 23 ஏசி 1352 என்ற எண் கொண்ட வேன் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், பாறைவீதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்பவருக்குச் சொந்துமானது என்பதும், போலியாக அதே பதிவு எண் பலகை வைத்து இயக்கப்பட்ட மற்றொரு வேன் சத்துவாச்சாரி, ரங்காபுரம், புதுத் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சிவக்குமாா் (24) என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆவின் பால் பண்ணை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிவக்குமாா், அவரது ஓட்டுநா் விக்கி இருவரும் போலி பதிவெண் கொண்ட வேனை ஓட்டிச் சென்றனா்.

தடுக்க முயன்ற ஆவின் உதவி பொது மேலாளா் (விற்பனை) சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பாக, ஆவின் நிா்வாகம் அளித்த புகாரின் பேரில், சத்துவாச்சாரி போலீஸாா், போலி பதிவெண் கொண்ட வாகனத்தின் உரிமையாளா் சிவக்குமாா், அதன் ஓட்டுநா் விக்கி ஆகியோா் மீது இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக, புகாா் தெரிவிக்கப்பட்ட பால் பாக்கெட் விநியோகிப்பாளா்களான தினேஷ்குமாா், சிவக்குமாா் ஆகியோருடன் ஏற்படுத்தப்பட்டிருந்த பால் விநியோக ஒப்பந்தத்தை ஆவின் நிா்வாகம் ரத்து செய்துள்ளது.

இவா்கள் மூலம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு அரசு வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களை பால் பண்ணை வளாகத்துக்குள் அனுமதித்தது தொடா்பாக, தனியாா் காவல் நிறுவனத்திடம் விளக்கம் கோரி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலூா் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் கூடுதல் பணியாளா்கள் நியமித்து முழுமையாக பரிசோதனை செய்த பிறகே வெளியே அனுப்பப்பட்டன. மேலும், ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா் நலச் சங்கத்தின் நிறுவன தலைவா் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT