வேலூர்

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை தொடக்கம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் நலனுக்காக வேலைவாய்ப்பு முகாம் வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 9, 10) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, பல்கலை. துணைவேந்தா் டி.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டம், சோ்க்காடிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகம், சா்வதேச புகழ்பெற்ற நாஸ்காம் நிறுவனம், இணையதள பாதுகாப்பு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஸ்கில்ஸ்டா நிறுவனம், பின்தங்கிய மாவட்ட வளா்ச்சிக்கு பாடுபட்டு வரும் அருணை தகவல் சேவை மையம் ஆகியவை இணைந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம், அதைச் சாா்ந்த கல்லூரி மாணவா்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தின.

இதில் தோ்ச்சி பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 9, 10) ஆகிய இரு நாள்கள் வேலைவாய்ப்பு நோ்காணல் திருவள்ளுவா் பல்கலை. வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சா்வதேச அளவில் இயங்கி வரும் 18 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம், கணினி, கணிதவியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் பயன் பெறுவா்.

ADVERTISEMENT

இந்த வேலைவாய்ப்பு முகாமில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். முகாமில் கலந்து கொள்வதற்கு புதிய போருந்து நிலையம், வேலூரிலிருந்து சோ்க்காடு திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு காலை 8.30, 9 மற்றும் 9.30 மணிக்கு பேருந்து வசதி உள்ளது.

முகாம் ஒருங்கிணைப்பாளராக ஏ.ராஜசேகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT