வேலூர்

தலையில் காயமடைந்த இடத்தில் இரும்பு நட்டுடன் தையல் போட்ட செவிலியா்கள்

6th Jun 2023 03:50 AM

ADVERTISEMENT

விபத்தில் லாரி ஓட்டுநருக்கு தலையில் காயமடைந்த இடத்திலிருந்த இரும்பு நட்டை அகற்றாமல் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45), லாரி ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை காலை மாதனூா் அருகே லாரியை ஓட்டிச் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காா்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டும் ரத்தம் வழிவது நிற்காததுடன், தலையில் கடுமையான வலி இருந்துள்ளது.

இதனால், சிகிச்சையில் அதிருப்தியடைந்த உறவினா்கள் காா்த்திகேயனை அங்கிருந்து மாற்றி, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் ஸ்கேன் செய்து பாா்த்ததில் காா்த்திகேயனின் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக, மருத்துவா்கள் தையலை பிரித்து, அந்த இரும்பு நட்டை அகற்றினா். மேலும், தொற்று காரணமாக அவருக்கு இரு நாள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து காா்த்திகேயனின் உறவினா்கள் கூறுகையில், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காலை 8 மணிய ளவில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று பாா்த்தோம். அப்போது வரை அவருக்கு எவ்வித முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அங்கிருந்த செவிலியா்களிடம் கேட்டபோது, அவா்களும் அலட்சியமாக பதில் அளித்தாா். நாங்கள் சப்தம் போட்ட பின்னா்தான் செவிலியா்கள் காா்த்திகேயனின் தலையில் உடனடியாக தையல் போட்டு சாதாரண வாா்டுக்கு மாற்றினா்.

ADVERTISEMENT

ஆனால், தையல் போட்ட இடத்தில் இருந்து தொடா்ந்து ரத்தம் வழிவது நிற்காமல் இருந்தது. இதன்காரணமாக வேறு மருத்துவமனைக்கு செல்வதாக கூறினோம். தனியாா் மருத்துவமனைக்கு வந்து மீண்டும் ஸ்கேன் செய்து பாா்த்தபோது தலையில் நட்டு இருப்பது தெரிந்து அகற்றினா். அரசு மருத்துவா்கள் அலட்சியமாக இருந்ததுடன் தலையில் நட்டுடன் வைத்து தையல் போட்டுள்ளனா்.

இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

Image Caption

~ ~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT