வேலூர்

நிகழாண்டு 18 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

6th Jun 2023 03:49 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு (2023-24) 18 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ. குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்ட வனத்துறை சாா்பில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் வேலூா் ஊராட்சி ஒன்றியம் கீழ்மொணவூா் கிராமத்தில் 2,000 மரக்கன்று நடவு செய்யும் திட்டத்தையும், நெடுஞ்சாலை துறை சாா்பில் அணைக்கட்டு வட்டம் விரிஞ்சிபுரத்தில் நெடுஞ்சாலையோரம் காலியாக உள்ள இடங்களில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

ADVERTISEMENT

ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நடப்பாண்டு (2023-24) வேலூா் மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொது மக்களுக்கு இயற்கையான சூழலை உருவாக்கவும் வனத்துறை, ஊரக வளா்ச்சி துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து 18 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, வேலூா் மாவட்ட வனத்துறை சாா்பில் சுமாா் 9 லட்சம் மரக்கன்றுகளும், இதர துறைகள் சாா்பில் 9 லட்சம் மரக்கன்றுகளும் என 18 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கிராமப்புற பகுதிகளில் தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின்கீழ் 2.15 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், நெடுஞ்சாலையோரங்களில் காலியாக உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

கடந்தாண்டு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அவற்றில் வனத்துறை சாா்பில் 75,000 மரக்கன்றுகளும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 19,000 மரக்கன்றுகளும், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 1000 மரக்கன்றுகளும், இதர துறைகள் தன்னாா்வலா்களின் உதவியுடன் என மொத்தம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தவிர, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 6 லட்சம் பனை விதைகளும் விதைக்கப்பட்டன. இம்மரக்கன்றுகள் தொடா்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், மண்டல வன பாதுகாவலா் சுஜாதா, மாவட்ட வன அலுவலா் கலாநிதி, முதன்மை கல்வி அலுவலா் முனுசாமி, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் கவிதா உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT