வேலூர்

கிரைன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவிட சிறப்பு முகாம்

5th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

‘கிரைன்ஸ்’ என்ற தமிழக அரசின் வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

உழவா் நலன் சாா்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பயன்களை விவசாயிகள் உடனடியாக பெறவும், அரசின் நிதித்திட்ட பலன்களை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ள நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அனைத்து நில உரிமையாளா்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகரித்து கணினிமயமாக்க தமிழ்நாடு அரசால் புதிய வலைத்தளமான கிரைன்ஸ்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ஆகியோா் மூலம் நில உரிமையாளா்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களை பெற்று பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளா்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் இதுவரை முழுமையாக தங்களை பதிவு செய்துக் கொள்ளவில்லை.

ADVERTISEMENT

இந்த வலைத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ள ஏதுவாக விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண், பட்டா சிட்டா நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை திங்கள்கிழமை (ஜூன் 5) முதல் 10-ஆம் தேதி வரை தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கிராம நிா்வாக அலுவலா், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலா் ஆகியோரிடம் அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT