வேலூர்

வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜூன் 13 முதல் டாப்செட்கோ சிறப்பு கடன் மேளா

5th Jun 2023 12:28 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) சாா்பில், சிறப்பு கடன் மேளா வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜூன் 13 முதல் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மக்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) சாா்பில், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள், குழுக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுள்ள தனி நபா் கடன், சுய உதவிக்குழு கடன், கல்விக் கடன் உள்ளிட்ட கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதையொட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து வேலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பயன் பெறும் வகையில், வட்டாட்சியா் அலுவலகங்கள் மூலம் டாப்செட்கோ சிறப்பு கடன் மேளா நடைபெற உள்ளது.

அதன்படி, வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதியும், அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் 14-ஆம் தேதியும், காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 15-ஆம் தேதியும், குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 16-ஆம் தேதியும், கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 19-ஆம் தேதியும், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் 20-ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த கடன் முகாம்கள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், இஸ்லாமியா்கள், கிறிஸ்துவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சியா்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம், தொழில் செய்வதற்கு கடனுதவி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தக் கடனுதவிகளை பெற விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், சிறுபான்மையினத்தவராக இருந்தால், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறமாயின் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார மேம்பாடு, கைவினைஞா் மற்றும் மரபுவழி சாா்ந்த தொழில்கள் மேம்பாடு, தொழில், தொழில் சேவை நிலையங்கள், விவசாயம் தொடா்பான தொழில்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை ஆண்டுக்கு 5 சதவீத வட்டியில் கடன் பெறலாம்.

இதில் பயனாளிகள் பங்களிப்பு 5 சதவீதம் செலுத்த வேண்டும். கடன்பெற விரும்புவோா் தங்களது ஜாதி, வருமானம், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா், வங்கி கோரும் ஆவண நகல்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT