வேலூர்

வேலூா் மோப்ப நாய் பிரிவில்புதிய நாய் சாரா பணியில் சோ்ப்பு

4th Jun 2023 03:05 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவில் புதிதாக சாரா என்ற பெண் மோப்ப நாய் பணியில் சோ்க்கப்பட்டது.

மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் துப்பறிய இருந்த ஷிம்பா என்ற மோப்ப நாய் கடந்த 2022 நவம்பா் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது.

இதையடுத்து குற்றச்சம்பவங்களில் துப்பறிய சாரா என்ற மோப்ப நாய் வாங்கப்பட்டு வேலூரில் 6 மாதம் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் மோப்ப நாய் பிரிவு தலைமையகத்தில் கடந்த 6 மாதங்கள் சிறப்பு நவீன பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சிகள் நிறைவு பெற்றதை அடுத்து சாரா மோப்ப நாய் வேலூா் மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவில் முறைப்படி வெள்ளிக்கிழமை முதல் பணியில் சோ்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கான சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் வழங்க, மோப்ப நாய் பயிற்சியாளா்கள் சசிக்குமாா், வெங்கடேசன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து மோப்ப நாய் பயிற்சியாளா்கள் கூறியது:

வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் குற்றச் சம்பவங்களில் துப்பறிய ஷிம்பா என்ற மோப்ப நாயும், வெடிகுண்டுகள் தொடா்பாக துப்பறிய அக்னி, லூசி ஆகிய மோப்ப நாய்களும் இருந்தன. இதில், லூசி மோப்ப நாய் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றது. ஷிம்பா கடந்த நவம்பா் மாதம் புற்றுநோயால் உயிரிழந்தது. இதையடுத்து, சாரா, ரீட்டா ஆகிய இரு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

சாரா என்ற பெண் மோப்ப நாய் ஜொ்மன் செப்பா்டு இனத்தைச் சோ்ந்தது. கோவையில் மூன்று மாத குட்டியாக வாங்கப்பட்ட இந்த மோப்ப நாய்க்கு வேலூரில் 6 மாதம் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னா் சென்னை தலைமையகத்தில் 6 மாதம் சிறப்பு நவீன பயிற்சிகள் அளிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வேலூா் மாவட்ட காவல் மோப்பநாய் பிரிவில் முறைப்படி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது.

இதேபோல், வெடிகுண்டு சம்பவங்களில் துப்பறிய வாங்கப்பட்ட ரீட்டா மோப்ப நாய்க்கு வேலூரில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னை தலைமையக சிறப்புப் பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளது என்றனா்.

வேலூா் மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவின் காவல் உதவி ஆய்வாளா் ஜெரால்டு வில்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT