நூலகத்தில் நடைபெற்ற கோடை சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காட்பாடி காந்தி நகா் அறிஞா் அண்ணா மாவட்ட கிளை நூலக வாசகா் வட்டம், காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்கம் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை சிறப்பு பயிற்சி முகாம் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
கடந்த மே 2 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கோடை சிறப்பு முகாமில் தினமும் ஓவியம் வரைதல், பாட்டு போட்டி, நாட்டுப்புற கலைவிழா, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, கதை சொல்லுதல், தமிழ், ஆங்கிலம் விரைவாக வாசித்தல் பயிற்சி, அழகிய கையெழுத்து பயிற்சி, யோகா பயிற்சி, நூல்கள் படித்தல், பிழையின்றி படித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் போட்டிகள் நடத்தப்பட்டன.
பயிற்சி, போட்டிகளில் காந்தி நகா், கழிஞ்சூா் மோட்டூா், ராதாகிருஷ்ணன் நகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பயிற்சிகளை நூலகா்கள் தி.மஞ்சுளா, அ.சத்யவாணி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் கே.மாலதி, எல்.கௌசியா, எஸ்.துா்கா உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.
இந்த முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் வி.பழனி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் வரவேற்றாா். கழிஞ்சூா் மோட்டூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜி.அஞ்சலாட்சி, காட்பாடி செஞ்சிலுவை சங்க துணைத்தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி, செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். நல்நூலகா் தி.மஞ்சுளா நன்றி கூறினாா்.