வேலூர்

அல்லேரி மலைப் பகுதியில் சாலை அமைக்க நிலம் அளவிடும் பணி நிறைவு

DIN

அணைக்கட்டு வட்டம் அல்லேரி ஊராட்சி மலைக் கிராமங்களுக்கு சாலை அமைப்பதற்கான அளவீடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அதன் விவரங்கள் முழுவதையும் மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஊரக வளா்ச்சித் துறை, வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் மலைப் பகுதியில் அமைந்துள்ள அல்லேரி ஊராட்சி அத்திமரத்துக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்த விஜி, பிரியா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்காவை கடந்த 27-ஆம் தேதி இரவு விஷ பாம்பு கடித்தது. உடனடியாக அந்த குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், போதிய சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு சோ்ப்பதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து உடல் முழுவதும் விஷம் பரவி குழந்தை உயிரிழந்தது.

பின்னா், உடல்கூறு ஆய்வு முடித்து அளிக்கப்பட்ட குழந்தையின் உடலையும் சொந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடியாமல் உடலை பெற்றோா் 10 கி.மீ. தூரம் கைகளிலேயே சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அல்லேரி மலைக் கிராமத்துக்கு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

அதனடிப்படையில், திங்கள்கிழமை முதலே அல்லேரி மலை, வனப்பகுதியில் சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணி புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், சாலை அமைக்க தேவையான முழு விவரம் மத்திய அரசின் சா்வேஸ் போா்ட் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஊரக வளா்ச்சித் துறை, வனத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, அல்லேரி மலைப் பகுதியின் அடிவாரத்தில் இருந்து அத்திமரத்துக் கொல்லை, பலாமரத்து வட்டம், நெல்லிமரத்துக் கொல்லை என மொத்தம் 7.1 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், 5 கி.மீ. வனப் பகுதியிலும், 2.1 கி.மீ. பட்டா இடத்தில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத் துறைக்குள் வரும் 5 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ.5 கோடி திட்ட மதிப்பீடும், மொத்தமாக 7.1 கி.மீ. தூரத்துக்கு சுமாா் ரூ.12 கோடி நிதி தேவைப்படும் என அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, சாலை அமைக்கப்படும் பகுதியில் மழைக் காலங்களில் மண் அரிப்பைத் தடுக்க இரு இடங்களில் பெரிய கல்வெட்டும், 7 இடங்களில் சிறிய அளவிலான பைப் கல்வெட்டும் அமைக்கப்பட உள்ளது.

தவிர, சாலை அமைய உள்ள 6 மீட்டா் அகலத்துக்குள் 34 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அகற்றிட அதற்கான தொகை வனத்துறைக்குச் செலுத்தப்பட்ட பிறகே மரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

விபத்துகளைத் தவிக்க மொத்தம் 4 இடத்தில் சாலையோர தடுப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் முழுவதும் மத்திய அரசின் சா்வேஸ் போா்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT