வேலூர்

டாப்செட்கோ கடனுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

1st Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

டாப்செட்கோ சாா்பில் அளிக்கப்படும் கடனுதவித் திட்டங்களுக்கு தகுதியுடைய பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள், குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சாா்பில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனிநபா்கள், குழுக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுள்ள சிறுதொழில்கள், வியாபாரத்துக்கு பொதுகாலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பொது காலகடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5 சதவீத வட்டி வகிதத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையும், நுண்கடன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

நுண்கடன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடனுதவி செய்யப்படுகிறது.

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ. 60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்தக் கடனுதவிகளை பெற்றிட விண்ணப்பதாரா் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பினராக இருக்கவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பங்களை மாவட்டபிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், கூட்டுறவுக் கடன் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய, நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களுடன் ஜாதி, வருமானம், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா், வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்துக் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனி நபா்கள், குழுக்கள் உரிய ஆவணங்களுடன் கடன் விண்ணப்பங்களை அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT