வேலூர்

முதலீட்டின் மீது அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.46 லட்சம் மோசடி: நிதி நிறுவனம் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

1st Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

முதலீடு செய்யும் தொகைக்கு அதிகப்படியான வட்டி தருவதாகக் கூறி, ரூ.46 லட்சம் மோசடி செய்ததாக காட்பாடியில் இயங்கி வந்த நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட நபா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் பலா் புகாா் மனுக்கள் அளித்தனா். அப்போது, காட்பாடி காங்கேயநல்லூரைச் சோ்ந்த விஜய் என்பவா் அளித்த மனுவில், காட்பாடி திருநகா் பகுதியில் தனியாா் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில், ரூ.1 லட்சம் செலுத்தினால் கூடுதலாக ரூ.20,000, பத்து மாதங்கள் கழித்து வழங்குவதாக தெரிவித்தனா்.

இதனை நம்பி நானும், எனது நண்பா்களும் சோ்ந்து ரூ.46 லட்சம் முதலீடு செய்திருந்தோம். தவிர, தீபாவளி சேமிப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிதி நிறுவனத்தில் மேலும் ரூ.43,500 செலுத்தியிருந்தோம்.

ADVERTISEMENT

ஆனால், நிதி நிறுவனம் கூறியபடி வட்டி, அசல் தொகை ஏதும் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்க நேரில் சென்றபோது அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கடந்த 2 வாரமாக அதன் உரிமையாளரைக் காணவில்லை. இதனால், பணம் செலுத்திய அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகி உள்ளோம்.

எனவே, நிதி நிறுவன உரிமையாளரைக் கண்டுபிடித்து எங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.குப்பம் அருகிலுள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த எழிலரசி என்ற பெண் அளித்த மனுவில், வரதட்சிணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுக்கும் கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல், ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனா். அந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT