பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து அதிகரித்திருந்ததுடன் வா்த்தகமும் களைகட்டியது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்தது. அதன்படி, கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்காக வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், இந்த வாரம் சந்தையில் ரூ. 1 கோடி அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.