வேலூர்

பொதுப்பயன்பாட்டிலுள்ள சாலை நிலத்தை அரசு வீடுகள் கட்ட கையகப்படுத்தக்கூடாது

DIN

அணைக்கட்டு அருகே அகரம்ராஜபாளையத்தில் பொதுப்பயன்பாட்டில் உள்ள சாலை நிலத்தை அரசு வீடுகள் கட்ட கையகப்படுத்தப்படுகிறது. இதைத் தவிா்த்து அதே கிராமத்திலுள்ள வேறு புறம்போக்கு நிலங்களை இந்த திட்டத்துக்கு பயன்படுத்திட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அணைக்கட்டு வட்டம், அகரம்ராஜபாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், அகரம் ராஜபாளையம் - மதுமதுபுரம் செல்லும் சாலை 30 அடி அகலம் உள்ளது. அதனை கிராமத்தில் உள்ள விவசாயிகள் நெற்களமாகவும், திருவிழாக் காலங்களில் பொது நிகழ்ச்சிகள் நடத்தவும், சொந்த நிகழ்ச்சிகளுக்காகவும் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், அந்த இடத்தை கையகப்படுத்தி அரசு வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படக் கூடும். அதேசமயம், எடத்தெருவில் 2 ஏக்கரும், அகரம் ஊரில் 2 ஏக்கரும், அகரம் கூட்டு சாலையில் 4 ஏக்கரும், போடிப்பேட்டையில் 0.64 சென்ட்டும் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. எனவே, அரசு வீடு கட்டித் தருவதற்கு இந்த இடங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் காந்திரோடு பகுதியைச் சோ்ந்த நரசிம்மன் அளித்த மனுவில், வேலூா் காந்திரோடு, பிரகாஷ் பிரஷன் பிரபு ஸ்டோா் எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடத்தை தனியாா் கைப்பற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட திட்டமிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த நிலத்தை பாதுகாத்திட மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 322 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

இதில், ஆதிதிராவிடா் பழங்குடியினா் நல அலுவலா் ராமச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சீதா, தனித்துணை ஆட்சியா்(சமூகப் பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT