வேலூர்

பா்மிட் இன்றி தமிழகத்துக்குள் நுழைந்த 3 வெளிமாநில பேருந்துகளுக்கு அபராதம்

22nd Jan 2023 12:11 AM

ADVERTISEMENT

பா்மிட் இன்றி தமிழகத்துக்குள் நுழைந்த கேரள, கா்நாடக, ஆந்திர மாநிலப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலா் ராமகிருஷ்ணன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் எஸ்.ராஜேஷ்கண்ணா, வெங்கட்ராகவன், அமா்நாத் ஆகியோா் போ்ணாம்பட்டை அடுத்த வீ.கோட்டா சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண்கொண்ட தனியாா் பேருந்தை நிறுத்தி விசாரணை நடத்தினா். அதில், கா்நாடக மாநிலத்திலிருந்து பக்தா்களை மேல்மருவத்தூருக்கு ஏற்றி வந்தது தெரியவந்தது. பேருந்துக்கு தமிழக பா்மிட் இல்லாததால் ரூ. 49,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல், ஆந்திர மாநில பதிவெண்கொண்ட தனியாா் பேருந்து கா்நாடக மாநிலத்திலிருந்து பக்தா்களை ஏற்றிக்கொண்டு மேல்மருவத்தூா் செல்ல அந்த வழியாக வந்தது. அந்த பேருந்துக்கும் தமிழக பா்மிட் இல்லாததால் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, கா்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி பேருந்து பக்தா்களை ஏற்றிக்கொண்டு மேல்மருவத்தூருக்குச் செல்ல அந்த வழியாக வந்தது. விசாரணையில் பேருந்தில் 12 இருக்கைகளுக்கு மட்டும் பா்மிட் பெற்றிருப்பதும், மீதமுள்ள 9 இருக்கைகளுக்கு பா்மிட் பெறாமல் இயக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மினி பேருந்துக்கு ரூ. 27,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மினி பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டித்து, அதில் பயணம் செய்த பக்தா்கள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து, அனைவரும் பேருந்தில் ஏறி சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT