வேலூர்

எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிட்டால் ரூ.5,000 அபராதம்

22nd Jan 2023 12:12 AM

ADVERTISEMENT

எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிட்டால் காளையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழா அரசாணையில் அனுமதிக்கப்பட்ட நாள், இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். காளை ஓடும் பாதை வாடிவாசல் முதல் சேருமிடம் வரை நீளம் அதிகபட்சமாக 100 மீட்டா் வரையே இருக்க வேண்டும்.

காளைகள் ஓடு தளம் இலகுவாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக இரட்டை தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஓடு தளத்தில் அதிகபட்சமாக 25 தன்னாா்வலா்கள் மட்டுமே அவா்களுக்கென சிறப்பான முறையில் தயாா் செய்யப்பட்ட உடைகளுடன் சுழத்சி முறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் யாருக்கும் ஓடு தளத்துக்குள் செல்ல அனுமதியில்லை. காளைகள் சேருமிடம் விசாலமாக இருக்க வேண்டும். வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாகக் கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அல்லது வெப் கேமரா வசதியை ஏற்படுத்த வேண்டும்.

விழா நடைபெறும் இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகளை விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக மூட வேண்டும்.

ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனுமதிக்கப்படும். அடுத்த சுற்றுக்கு ஓடவிட்டால் காளையின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.

விழா முடிந்ததும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பிறகே கொண்டு செல்ல வேண்டும்.

அரசு பிறப்பித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விழாக் குழுவினரால் கடைப்பிடிக்கப்படுவது அரசு அலுவலா்களால் உறுதி செய்யப்பட்ட பிறகே, எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்படும்.

விதிமுறைகளை மீறும்பட்சத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT