பொங்கல் விடுமுறையையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் ரூ. 16.35 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை நிா்வாக வசதிக்காக டாஸ்மாக் நிா்வாகம் வேலூா், அரக்கோணம் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. வேலூா் டாஸ்மாக் நிா்வாக மாவட்டத்தில் உள்ள வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மொத்தம் 123 கடைகள் உள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை நாள்களில் மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அனைத்து வகையான மது பானங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து, மது பிரியா்கள் டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மதுபானங்களை வாங்கிச் சென்றனா். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அதிகரித்தது.
அந்த வகையில், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களில் மட்டும் ரூ. 9 கோடிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 7.35 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.