வேலூர்

வேலூா் 2022-இல் சாலை விபத்து இறப்புகள் அதிகரிப்பு: மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்

1st Jan 2023 12:35 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 2022-இல் விபத்து உயிரிழப்புகள் அதிகரித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் 2022-இல் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்துகளில் 268 போ் உயிரிழந்துள்ளனா். 2021-இல் விபத்து உயிரிழப்பு 238-ஆக இருந்தது.

விபத்துகளைக் குறைக்க விஐடி போக்குவரத்து மேலாண்மைத் துறை மூலம் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு, விபத்து ஏற்படும் பகுதிகளாக 51 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மாநகரில் போக்குவரத்து விதி மீறல்களைக் கண்காணித்து அபராதம் விதிக்கும் இ-சலான் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. தவிர, மாவட்டத்தில் இ-பீட் நடைமுறை 51-ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில், ஐஐடி குழு பரிந்துரையை அமல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய அனுமதி பெற்றுள்ளது.

மோட்டாா் வாகன வழக்குகள் மூலம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சைபா் குற்றப்பிரிவு மூலம் 2022-ஆம் ஆண்டில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது அதிகரித்துள்ளது. அதன்படி, 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021-ஆம் ஆண்டு 103 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2022-இல் 114 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021-இல் மாயமானோா் எண்ணிக்கை 415 பேராக இருந்த நிலையில், 2022-இல் இது 466 பேராக அதிகரித்துள்ளது. இவா்களில் 392 போ் பெண்கள்.

மணல் கடத்தல் தொடா்பாக 2022-இல் 308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 317 போ் கைது செய்யப்பட்டனா். 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT