தஞ்சாவூர்

தஞ்சாவூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி 

19th May 2023 08:13 PM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாடியம்மன்கோவில் சாலை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோபால்(58), இவரது மனைவி ஜெயலட்சுமி(43). இருவரும் செருப்பு தைக்கும் தொழிலாளி, அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சேதுபாவாசத்திரத்தில் இருந்து கட்டுமாவடி நோக்கி செல்லும், கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா சந்திப்பு பகுதியில் கோபால், ஜெயலட்சுமி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியாகினர்.  சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

ADVERTISEMENT

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவர்கள் யார் என தெரியாமல் அவர்களது பையை பரிசோதனை செய்த போது அவர்களிடமிருந்த ஆதார் அட்டையின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக போராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த தம்பதிக்கு செந்தில் (21)என்ற மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்ப்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT