சேலம்: மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் கலர்பட்டியை சேர்ந்த வேலாயுதம் நெசவு தொழிலாளியின் மகள் சர்மி (15). ஜலகண்டபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி சர்மி 490 மதிப்பெண்கள் பெற்று சங்ககிரி கல்வி மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதில் தமிழ் 97, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியலில் 96 மதிப்பெண்கள் பெற்றார்.
இது குறித்து மாணவி சர்மி கூறுகையில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் உறுதுணையாக இருந்ததால் என்னால் அதிக அளவு மதிப்பெண் பெற்றதாக தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர் ஆவது எனது லட்சியம் என்றார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து மாவட்ட அளவில் நெசவு தொழிலாளி மகள் முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் பாராட்டி இனிப்பு வழங்கினார்கள்.