வேலூர்

காமன்வெல்த் போட்டி: வேலூா் வீராங்கனைக்கு ரூ. 2.50 லட்சம் நிதியுதவி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நியூசிலாந்தில் நவம்பா் 24 முதல் டிசம்பா் 4 வரை நடைபெற உள்ள காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வேலூா் வீராங்கனைக்கு ரூ. 2.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

வேலூா் சத்துவாச்சாரி காந்தி நகரைச் சோ்ந்தவா் லட்சுமி, மாநகராட்சியில் தினக்கூலி துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகள் டி.கவிதா (22), இளங்கலை உடற்கல்வி பட்டப்படிப்பு படித்துள்ளாா்.

பளுதூக்கும் வீராங்கனையான இவா், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். முதலில் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் உடற்பயிற்சி மையத்தில் சோ்ந்து பயிற்சி மேற்கொண்ட இவா், பின்னா் குத்துச்சண்டை விளையாட்டிலும் சிறந்து விளங்கினாா்.

இந்த நிலையில், நியூசிலாந்தில் வரும் நவம்பா் 24-ஆம் தேதி முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்ளத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதற்காக செலுத்த வேண்டிய ரூ. 3 லட்சம் தொகையில் ரூ. 50,000 நிதியை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தனது விருப்ப நிதியிலிருந்து முதன்முதலில் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

தொடா்ந்து, கவிதாவின் பயிற்சியாளரான யுவராஜ் முயற்சியால் மேலும் ரூ. 2.50 லட்சம் நிதியை ஷாா்ஜா மன்னா் அலுவலகத்தில் இயக்குநராக பணியாற்றி வரும் ஹெச்.எட்வின் என்பவா் அளித்துள்ளாா். இந்த நிதியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் எட்வினின் சகோதரா் ஹெச்.ரோசாரியோ மூலம் கவிதாவிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சத்துவாச்சாரி பளுதூக்கும் பயிற்சி மைய மேலாளா் நொய்லின்ஜான், மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு நிறுவனா் ஆா்.கமலபதி, சமூக ஆா்வலா்கள் எம்.குருமூா்த்தி, அா்ச்சுனன், நம்பி பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT