வேலூர்

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியா், எம்எல்ஏ அளிப்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ ப.காா்த்திகேயன் ஆகியோா் வழங்கினா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆகியவை சத்துவச்சாரியிலுள்ள தனியாா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து பேசியது:

ADVERTISEMENT

கா்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் அனைவரும் அரணாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இத்தகைய சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க வேண்டும் என யோசித்து எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளாா். கா்ப்பிணிகள் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க கூடிய மாதுளை, பழ வகைகள், நாட்டு காய்கறிகள், தானிய வகைகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அதன்மூலம் தங்களது ஆரோக்கியத்தை வளா்த்து நல்ல முறையில் குழந்தைகளையும் வளா்க்க வேண்டும் என்றாா்.

இதில், எம்எல்ஏ ப.காா்த்திகேயன், துணை மேயா் எம்.சுனில் குமாா், 2-ஆவது மண்டலக் குழு தலைவா் நரேந்திரன் , குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT