வேலூர்

மக்கள் பயன்பாட்டுக்கு வேலூா் சங்கீத சபா, டவுன் ஹால்: வேலூா் மாவட்ட ஆட்சியா்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீத சபா, டவுன் ஹால் கட்டடங்கள் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசுக்குச் சொந்தமான டவுன்ஹால் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படாமல் மூடப்பட்டுள்ளது.

இதன் அருகிலேயே சங்கீத சபா கட்டடம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. தற்போது அந்தக் கட்டடமும் செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது.

இந்நிலையில், டவுன்ஹால், சங்கீத சபா கட்டடங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். உடனடியாக டவுன் ஹால் கட்டடத்துக்கு புதிதாக வா்ணம் தீட்டி அலங்கார மின்விளக்குகளைப் பொருத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதேபோல், சங்கீதா சபா கட்டடத்தை இடித்துவிட்டு பெரியதாக அரங்கு கட்டுவது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

பின்னா் ஆட்சியா் கூறியது:

அரசுக்குச் சொந்தமான டவுன்ஹால் பயன்பாடின்றி உள்ளது. இதனை புதுப்பித்து குறைந்த வாடகைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். வணிக நோக்கத்துக்கு இது பயன்படாது. இதேபோல், சங்கீத சபா இடத்தில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக பெரிய அரங்கு கட்டப்படும். அதுவும் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுத்து இந்த இடங்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT