வேலூர்

தமிழக கல்விக் கொள்கை: வேலூரில் கருத்துக் கேட்பு

26th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

தமிழக கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து வேலூரில் பொதுமக்கள், மாணவா்கள், கல்வியாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தமிழக கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து வடக்கு மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் வேலூா் ஆக்ஸிலியம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அந்த இயக்கத்தின் வேலூா் மாவட்ட தலைவா் பெ.அமுதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.முனிசாமி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், கே.விசுவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் எல்.நாராயணசாமி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துப் பேசினாா்.

மாநில துணைத் தலைவா் என்.மாதவன் தமிழக கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், மாநில பொதுச் செயலா் எஸ்.சுப்பிரமணி தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்தும் விளக்கமளித்தனா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து தமிழக கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள், மாணவா்கள், கல்வியாளா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது; அதனப்படையில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், 100-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. மழலையா் கல்வி, பள்ளிக் கல்வி, உயா்கல்வி, தமிழகத்துக்கான கல்விக் கொள்கை குறித்து தனித்தனி தலைப்புகளில் கருத்துகள், ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

நான்கு மண்டலங்களிலிருந்து பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகள் தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்று இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.சுப்பிரமணி தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா் கலைநேசன், திருவள்ளூா் மாவட்ட செயலா் மோசஸ், ராணிப்பேட்டை மாவட்ட செயலா் பழனிவேல், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசுதா, ஆக்ஸிலியம் கல்லூரி கிளைச் செயலா் காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT