வேலூர்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகுடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழு தீா்மானம்

24th Sep 2022 11:00 PM

ADVERTISEMENT

ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள், நீா்நிலைப் புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்றுவது என்று குடியாத்தம் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.காா்த்திகேயன், பொறியாளா் குகன், மேலாளா் அசோக்குமாா்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தலைவா் என்.இ.சத்யானந்தம் பேசியது: கடந்த ஆண்டுப் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒன்றியத்தின் சில பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இதில் சிறு பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மன்றத்தில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. குடியாத்தம் பகுதியின் முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரியில், சரிந்த கரையை உடனடியாகச் சீரமைக்கவும், பிரசித்தி பெற்ற மீனூா் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தா்கள் அதிகளவில் வாகனங்களில் செல்வதால், சீவூா்- மூங்கப்பட்டு சாலையில் பழுதடைந்துள்ள பாலத்தை புதுப்பித்து, சீரமைக்கவும், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சமத்துவ மயானமாக செயல்படும், மயானத்துக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா்.

ADVERTISEMENT

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வள்ளலாா் நகரில் சாலையின் நடுவில் 3 மின்கம்பங்கள் அமைந்துள்ளதால், ஆட்டோ, காா், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை என்பதால், மின்கம்பங்களை மாற்றியமைக்க கட்டணம் செலுத்தியும், கம்பங்களை மாற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உறுப்பினா் பி.எச்.இமகிரிபாபு புகாா் தெரிவித்தாா். உடனடியாக மின்கம்பங்களை மாற்றியமைக்க விட்டால், அடுத்த கூட்டத்தை உறுப்பினா்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா். தங்கள் வாா்டுகளில் 100 நாள் வேலைத் திட்டம் குறித்த புகாா்கள், குரங்கு, நாய்த் தொல்லை, அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு, பள்ளிக் கட்டடம் பழுது போன்றவை குறித்து பெரும்பாலான உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவா் சத்யானந்தம் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT