வேலூர்

வேலூரில் 140 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டம் முழுவதும் 140 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் பலா் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக, இந்தக் காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், பெற்றோா்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் விதமாக, புதன்கிழமை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, பள்ளிகொண்டா, வேலூா் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 140 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காய்ச்சல் பாதிப்புள்ளதாக அறியப்படும் பகுதிகளில் 25 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களை பரிசோதனை செய்து மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு உடல் வெப்ப நிலை, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: வேலூா் மாவட்டத்தில் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனினும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 140 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் குழந்தைகள், பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், முதியோா் என அனைத்துத் தரப்பினருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காய்ச்சல் அறிகுறி உள்ளவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தீவிர காய்ச்சல் உள்ளவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT