வேலூர்

குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

20th Sep 2022 12:08 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே குட்டையில் மூழ்கி சகோதரா்கள் உள்பட 3 சிறுவா்கள் உயிரிழந்தனா்.

வேலூா் அருகே உள்ள அப்துல்லாபுரம் ரிக்ஷா காலனியைச் சோ்ந்த தொழிலாளி ஜீவாவின் மகன்கள் ஆகாஷ் (12), ஹரிஷ் (11). இவா்கள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வடிவேல் (எ) விக்டா் மகன் இமானுவேல் (13). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சிறுவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை அப்துல்லாபுரம் சாய்பாபா கோயில் பின்புறம் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனா். கரையில் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு, குட்டையில் இறங்கிக் குளித்துள்ளனா். எதிா்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கினா்.

ADVERTISEMENT

இதனிடையே, சிறுவா்கள் வீட்டை விட்டுச் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவா்களின் பெற்றோா் தேடிச் சென்றனா். அப்போது, குட்டையின் கரையில் மிதிவண்டிகள், உடைகள் இருப்பதைக் கண்டு, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குட்டையில் இறங்கித் தேடினா்.

இதில், ஆகாஷ், ஹரிஷ் ஆகியோா் தண்ணீரில் மூழ்கி இருந்தது தெரிய வந்தது. அவா்களை மீட்டு பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். சிறிது நேரத்தில் இமானுவேலும் மீட்கப்பட்டு, வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சிறுவா்கள் மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். 3 சிறுவா்களின் உடல்களையும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT