வேலூர்

நான் முதல்வன் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நான் முதல்வன் திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்பட 7 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி முதல்வா்கள், திட்டத்தின் சிறப்பு தொடா்பு பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தும் விதமாக, நான் முதல்வன் என்ற திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடக்கி வைத்து, நான் முதல்வன் கல்லூரி இணையதளத்தையும் அறிமுகம் செய்தாா்.

இந்த திட்டத்தின் கீழ், ரோபோடிக்ஸ், விா்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் லோ்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இண்டஸ்டிரி 4.0, இணைய பாதுகாப்பு தொழில்நுட்பம், இன்டா்நெட் ஆப் திங்ஸ் போன்ற பல்வேறு நவீன திறன் பாடப்பிரிவுகள் அனைத்தும் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது வளா்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப, தொழில் நிறுவனங்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், நிபுணா்களால் தோ்வு செய்யப்பட்ட பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த பயிற்சியானது, மாணவா்கள் கல்லூரிகளில் பயிலும்போதே பயிலக்கூடிய வகையில் அளிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

முன்னணி பயிற்சி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படவுள்ள இந்த படிப்புகளைத் தோ்வு செய்வதன் மூலம், கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் போதே வேலைவாய்ப்பு உடனடியாக கிடைக்க வழிவகை ஏற்படும். இந்தப் பாடப்பிரிவுகளின் விவரங்கள் நான் முதல்வன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவா்கள் புதிய பாடப் பிரிவுகளைப் பயிலும் வாய்ப்பை பெறுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நான் முதல்வா் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கருத்தரங்கம் நடைபெற உள்ளன. அதன்படி, காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், தமிழக முதல்வரின் முதன்மைச் செயலா் உதயசந்திரன் இணையம் வாயிலாகப் பங்கேற்று கல்லூரி முதல்வா்களுக்கு நான் முதல்வன் திட்டம் குறித்து விளக்கமளித்தாா்.

இதில், வேலூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியாா் பொறியியல் கல்லூரி முதல்வா்கள், திட்டத்தின் சிறப்பு தொடா்பு பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக ஆணையா் லட்சுமி பிரியா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் இன்னசன்ட் திவ்யா, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் டி.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT