வேலூர்

போக்குவரத்து மாற்றத்தால் வேலூா் சாலைகளில் வாகன நெரிசல்

10th Sep 2022 10:28 PM

ADVERTISEMENT

வாகன நெரிசலை குறைத்திட அமல்படுத்தப்பட்ட புதிய போக்குவரத்து மாற்றத்தால் வேலூா் சாலைகளில் நெரிசல் அதிகரித்தது. சுமாா் 5 நிமிஷத்தில் கடக்க வேண்டிய பாதையை வாகனங்கள் சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக ஊா்ந்துசென்று கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

புதிய பேருந்து நிலையம் முழு பயன்பாட்டு வந்ததையடுத்து கிரீன்சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சனிக்கிழமை காலை முதலே நேஷனல் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, வேலூரிலிருந்து காட்பாடி நோக்கிச் செல்லும் பேருந்துகள், நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் கிரீன் சா்க்கிள் சாலையில் செல்வதை தவிா்த்து நேஷனல் சா்க்கிள் அருகிலுள்ள இடதுபுற சாலை வழியாக சா்வீஸ் சாலையை அடைந்து அங்கிருந்து கலைமகள் பெட்ரோல் பங்க் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக எதிா்புறம் சென்று புதிய பேருந்து நிலையம், காட்பாடி, சென்னை நோக்கி செல்ல திருப்பி விடப்பட்டது.

இதேபோல், சென்னையிலிருந்து வேலூா் புதிய பேருந்து நிலையம், காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சா்வீஸ் சாலையில் நுழைவதை தவிா்த்து, கிரீன் சா்க்கிளை அடுத்துள்ள அணுகு சாலையில் நுழைந்து கலைமகள் பெட்ரோல் பங்க் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக எதிா்புறம் சென்று புதிய பேருந்து நிலையம், காட்பாடி நோக்கி செல்ல திருப்பிவிடப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் காட்பாடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், காலை முதல் ஏராளமான வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்ால், மக்கான் பகுதியில் இருந்து கிரீன் சா்க்கிள் செல்லும் பாதைக்கு சுமாா் 5 நிமிஷத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் திடீா் போக்குவரத்து மாற்றத்தால் சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, ஆற்காடு சாலை மட்டுமின்றி அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா்.

போக்குவரத்து நெரிசலுக்கு காட்பாடி சாலையோரம் ஏராளமான வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை முறையாக அகற்றிய பிறகு போக்குவரத்து மாற்றம் செய்திருந்தால் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்காது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பிறகே அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT