வேலூர்

குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா் உத்தரவு

9th Sep 2022 12:52 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

குடியாத்தம் நகரில் புதன்கிழமை 3 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட போக்குவரத்தை நெரிசலைத் தவிா்க்கும் வகையில், நகராட்சி அலுவலகத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ், டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா், அதிகாரிகளுடன் பழைய பேருந்து நிலையம், அா்ச்சுன முதலி தெரு, காமராஜா் பாலம், தாழையாத்தம் பஜாா், சந்தப்பேட்டை பஜாா், நேதாஜி சவுக், நெல்லூா்பேட்டை சாலை, கெளண்டன்ய ஆறு ஆகிய பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கெளண்டன்ய ஆற்றின் குறுக்கே புதிதாக மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கினாலும், அது முழுமை பெற குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலாகும். அதுவரை போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாராபட்சமின்றி அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT